Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam
கருணை விண்ணப்பம்
karuṇai viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
083. கலி விண்ணப்பம்
kali viṇṇappam
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
1.
செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
2.
தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
3.
எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
4.
மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
5.
தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
6.
ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
7.
ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
8.
ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
9.
ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
10.
பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.
கலி விண்ணப்பம் // கலி விண்ணப்பம்
2685-2694-083-2-Kali Vinnapam.mp3
Download