திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரசாதப் பதிகம்
pirasātap patikam
திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

073. பிரார்த்தனைப் பதிகம்
pirārttaṉaip patikam

  திருவொற்றியூரும் திருத்தில்லையும்
  கட்டளைக் கலித்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
  துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
  வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
  இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
 • 2. ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
  சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
  மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
  ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
 • 3. நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
  சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
  குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
  புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
 • 4. அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
  பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
  இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
  மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
 • 5. வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
  ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
  பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
  நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.
 • 6. நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
  தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
  கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
  வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
 • 7. வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற
  பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
  நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
  மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.
 • 8. விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
  பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
  அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
  புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
 • 9. உண்டோஎன் போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
  கண்டோர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
  பண்டோர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
  எண்டோள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.
 • 10. கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
  விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
  தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
  உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.

பிரார்த்தனைப் பதிகம் // பிரார்த்தனைப் பதிகம்

No audios found!