Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
பிரார்த்தனைப் பதிகம்
pirārttaṉaip patikam
சிந்தைத் திருப்பதிகம்
sintait tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
074. திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
1.
வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
2.
கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே.
3.
பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
4.
துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.
5.
வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே.
6.
தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
7.
தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.
8.
துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
9.
கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
10.
கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.
திருப்புகற் பதிகம் // திருப்புகற் பதிகம்
2631-2640-074-2-Thirupugal Phadhigam.mp3
Download