Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam
உய்கைத் திருப்பதிகம்
uykait tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
075. சிந்தைத் திருப்பதிகம்
sintait tiruppatikam
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
1.
விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
2.
கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
3.
கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
4.
கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே.
5.
சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
6.
பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.
7.
வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
8.
என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
9.
குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
10.
அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.
சிந்தைத் திருப்பதிகம் // சிந்தைத் திருப்பதிகம்
[2-75, 2646]MSS--Peeyanaiyaa Rootum.mp3
Download
2641-2650-075-2-Sindai Thiru Padigam.mp3
Download