திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
புண்ணிய விளக்கம்
puṇṇiya viḷakkam
ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகிரி
shrī sivasaṇmuka nāma shaṅkīrttaṉa lakiri
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

002. அருள் நாம விளக்கம்
aruḷ nāma viḷakkam

  திருவொற்றியூர்
  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
  மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
  ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
  தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
  ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 2. தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
  தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
  இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
  பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
  உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 3. மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
  வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
  இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  பொன்உ லாவிய புயம் உடை யானும்
  புகழ்உ லாவிய பூஉடை யானும்
  உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 4. பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
  புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
  என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
  தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
  ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 5. வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
  மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
  இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
  கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
  உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 6. வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
  மறலி வந்துனை வாஎன அழைக்கில்
  ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  போது வைகிய நான்முகன் மகவான்
  புணரி வைகிய பூமகள் கொழுநன்
  ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 7. நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
  நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
  எண்ணும் என்மொழி குருமொழி ஆக
  எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
  பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
  உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 8. பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
  பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
  எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
  சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
  உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 9. மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
  மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
  எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
  சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
  ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
 • 10. நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
  நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
  இலவு காத்தனை என்னைநின் மதியோ
  எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
  பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
  பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
  உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
  ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

அருள் நாம விளக்கம் // அருள் நாம விளக்கம்