திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருள் வழக்க விளக்கம்
tiruvaruḷ vaḻakka viḷakkam
முத்தி உபாயம்
mutti upāyam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

007. சிவபுண்ணியத் தேற்றம்
sivapuṇṇiyat tēṟṟam

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
  கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
  அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
  அணியும் தொண்டரை அன்புடன் காண்க
  தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
  தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
  நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
  நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
 • 2. போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
  போக போகநீர் புலமிழந் தவமே
  நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
  நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
  சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
  தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
  காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
  கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
 • 3. தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
  சீறு பாம்புகண் டெனஒளித் தேக
  சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
  சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
  செய்ப வன்செய லும்அவை உடனே
  செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
  உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
  ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
 • 4. தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
  சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
  தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
  தழுவி யேஅதை முழுவதும் கேட்க
  சேய நன்னெறி அணித்தது செவிகாள்
  சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
  ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
  ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
 • 5. நல்ல நீறிடா நாய்களின் தேகம்
  நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
  வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
  வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
  சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
  சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
  அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
  ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
 • 6. அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
  அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
  தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
  சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
  இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
  இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
  மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
  வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
 • 7. முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
  முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
  பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
  பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
  புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
  போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
  சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
  தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
 • 8. இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
  கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
  இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
  எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
  இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
  ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
  கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
  இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.
 • 9. நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
  நரக இல்லிடை நடப்பதை ஒழிக
  ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
  உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
  கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
  குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
  ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
  அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
 • 10. நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
  நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
  கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
  கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
  மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
  மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
  அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
  அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.

சிவபுண்ணியத் தேற்றம் // சிவபுண்ணியத் தேற்றம்